Photo from a reddit post by u/aag_arwal at https://www.reddit.com/r/interestingasfuck/comments/kg5tkc/this_sculpture_of_the_hindu_lord_ganesha/


எனக்குப் பதினாறு வயதளவில் வீட்டருகில் வாழ்ந்த பத்மநாப ஐயரின் அறிமுகம் கிடைத்தது. அவரது தயவால் அதுவரை குமுதம்/கல்கி/ஆனந்தவிகடன் போன்ற ‘சந்தைப் பத்திரிகை’களை மட்டுமே படித்துவந்த எனக்கு கணையாழி, அலை போன்ற இலக்கியச் சஞ்சிகைகளும் சிறுபத்திரிகைகளும் அறிமுகமாகின.

அதற்கடுத்த வருடம் பாடசாலைச் சஞ்சிகைக்கு ஒரு கட்டுரை தரும்படி நண்பன் ஒருவன் கேட்டான். கீழேயுள்ள இந்தக் கட்டுரையை எழுதினேன். பிறகு அதைப்பற்றி அடியோடு மறந்து போனேன். ஒரு வாரத்துக்கு முன் பல தசாப்தங்களுக்குப் பிறகு தொடர்பு கொண்ட இன்னொரு பாடசாலை நண்பன் இந்த கட்டுரைத் தலைப்பைச் சொன்னபோதுதான் பிடரியில் யாரோ அடித்தது போல நினைவு வந்தது!

ஆனால் என்னிடமிருந்த பாடசாலைச் சஞ்சிகைகள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் எங்கள் வீடு தகர்க்கப்பட்டபோது திருநெல்வேலி மண்ணில் இரண்டறக் கலந்துவிட்டன.

ஆகவே கொஞ்சம் ‘அகழ்வாராய்ச்சி’ செய்து பாடசாலை ஆவணப் பேணகரின் தயவில் இதைத் தோண்டியெடுத்தேன். படித்ததும் தூக்கிவாரிப் போட்டது! இதில் சொன்ன கருத்துகளில் இப்பவும் எனக்குச் சம்மதம்தான். ஆனால் ஒரு ஏளனத்தொனியில் கிஞ்சித்தும் கருணையோ புரிந்துணர்வோ இல்லாமல் நார்நாராய்க் கிழித்து விமர்சனம் செய்யும் வித்துவக் காய்ச்சல் இந்தப் பதினேழு வயதுப் பையனுக்கு எங்கிருந்து வந்தது என்று கொஞ்சம் வியப்பாகவும் கொஞ்சம் வெட்கமாகவும் இருக்கிறது! அந்தக் காலத்துச் சிறுபத்திரிகைகளில் வரும் விமர்சனங்களின் ஸ்டைலை என்னை அறியாமாலே காப்பியடித்திருப்பேனோ? அப்படியானால் இந்தக் கட்டுரையில் நான் கிழிக்கிற ‘புதுக்கவிதை’களைப் போலவே இந்த விமர்சனமும் ஒரு கார்கோ கல்ட் இலக்கியம் எனலாம். ஐயகோ!

Leave a Reply

Trending