
➤ அடிவானத்தை மறைத்து நிற்கும் பனைமரங்கள்.
சூரியன் இல்லாத காலையில், செயின்கவரில்லாச் சைக்கிளில்
சுருட்டுப் பிடித்துகொண்டு தோட்டத்துக்குப் போகும் சட்டையில்லா மனிதர்கள்.
ஒழுங்கைகள், ஒழுங்கைகள்.
மேலும் ஒழுங்கைகள்.
கிடுகு போட்ட கதியால் வேலிகள்.
கோயில் மணி.
உதய பூசைக்குப் போகும் பெண்கள்.
கொஞ்சம் விடிந்ததும் ‘கள்ளன்-பொலிஸ்’ விளையாடும் சிறுவர்கள்.
சைக்கிளில் சாப்பாட்டும் பார்சலும் புத்தகக் கட்டுமாய்ப் புறப்படும் மாணவர்கள். (பேராதனைக்குப் புனித பயணம்)
— இவையெல்லாம் யாழ்நாட்டின் நீண்ட நெடும் பயணத்தின் இனிய காலை நினைவுகள்.
➤ கண்மூடித் திறக்குமுன்னே காலை கரைந்து போய்விட்டது.
➤ சூரியன் எகிறியடிக்கிறது, ரோட்டில் யாருமில்லை.
வீட்டுக்குள் புழுங்கப் புழுங்கப் பூட்டிக்கொண்டு இருப்பார்கள்.
சுவரெல்லாம் கவிதைகள்.
டவுனிலுள்ள நியூ மார்க்கெட் கடைகள். (இடைக்கிடை புகைவன.)
‘ஓடு… ஓடு…
ஆமி ட்ரக் வருகிறது’
உளம் பதைத்து, உடல் விதிர்த்துப்
பள்ளத்துள் விட்ட சைக்கிள்கள். (அதே செயின்கவரில்லாச் சைக்கிள்கள்.)
ஹர்த்தால்கள், ஹர்த்தால்கள்.
மேலும் ஹர்த்தால்கள்.
குண்டு வெடிப்புகள். ➞ வீட்டில் அடைவுகள், ஈடுகள், கடன்கள்.
அரிசி, எண்ணெய், சீனி, …., …., …., — தட்டுப்பாடுகள்.
கொஞ்சம் அடங்கியதும் ஆமி-புலி விளையாடும் சிறுவர்கள்.
வீடியோ கொண்டு வந்தது:
ஜேர்மனியால் (அல்லது கப்பலால் அல்லது சவூதியால்)
வந்த பெடியள்.
நிம்மதி கொண்டு போனது:
புலிக்கு (அல்லது புளொட்டுக்கு அல்லது டெலோவுக்கு)
போன பெடியள்.
ஆமி வந்து அள்ளிக் கொண்டு போன பெடியள்.
ஆறாம் நாள் அலையடித்துக் கொண்டு வந்து போட்ட பெடியள்.
அது தவிர ‘பெடியள்’
‘பத்து ஆமிக்குச் சமனான வித்தகர்கள்’.
எங்கே போகும் புனித பயணம் இது?
➤ இனியொரு நீண்ட இரவு வரும்.
அதன் பின் –
இன்னொரு காலை வரும்.
25 December 1984




Leave a Reply