கொலின்ஸ் பதிப்பகத்தின் “புதிய இரத்தின அகராதி”, 1974 பதிப்பு
கொலின்ஸ் பதிப்பகத்தின் “புதிய இரத்தின அகராதி”, 1974 பதிப்பு

எடுத்ததுக்கெல்லாம் அன்பளிப்பு கொடுக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. உறவினர் நண்பர்களைப் பார்க்கப் போகும் போது வெறுங்கையோடு போவதும் அவர்களின் பிறந்தநாள், ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு அன்பளிப்பு கொடுக்கத் தவறுவதும் அவர்களுக்கு ஆச்சரியமாகவும், ஒரு வேளை உள்ளத்தைப் புண்படுத்துவதாகவும் இருக்கலாம்.

ஆனால் இதை வைத்துக் கொண்டு எனக்கு அன்பளிப்புகள் கொடுப்பதில் நம்பிக்கையில்லை என்று நினைத்துவிடாதீர்கள்! தக்க தருணத்தில் தக்க அன்பளிப்பு ஒன்றை நான் கண்டு கொண்டால் அதைக் கொடுக்கத் தயங்குவதில்லை. அன்பளிப்பு கொடுத்து வாங்குவதை முக்கியமாகக் கொண்ட ஒரு பண்பாட்டில் பிறந்து வளர்ந்த எனக்கு நிறைய அன்பளிப்புகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் ஒரு சில அன்பளிப்புகள் மறக்க முடியாதவை; என் வாழ்வில் மிகப் பெரிய நேர்மறை விளைவுகளை உந்தியவை. இவை தான் அன்பளிப்புகள் பற்றிய என மனப்பாங்கை வடிவமைத்திருக்கலாம்.

அணுக்களால் அமைக்கப்பட்ட தொட்டறியக் கூடிய பொருட்கள் மட்டும்தான் அன்பளிப்புகள் அல்ல. அனுபவங்கள், ஆலோசனைகள், தோழமை, மற்றும் சும்மா ஒரு முன்மாதிரியான நடைமுறை எல்லாமே விலைமதிப்பற்ற அன்பளிப்புகளாக உருப்பெறலாம். சிலவேளை ஒரு அன்பளிப்பின் மகத்தான தாக்கம் கொடுப்பவருக்கே புரியாமல் இருக்கலாம். நல்லெண்ணத்தின் அடையாளமாகக் கொடுக்கப்பட்ட ஒரு சின்ன அன்பளிப்பு, அதைப் பெற்றவரின் வாழ்க்கையை ஆழமாகப் பண்படுத்தியிருக்கலாம்.

அம்மாவுக்கு ஆறு சகோதர சகோதரிகள். நான் வளரும் பருவத்தில் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தேன். அவர்கள் எல்லோருக்கும் நான்தான் அடுத்த தலைமுறையின் முதற்பிள்ளை என்பதால் வாஞ்சையாக இருந்திருக்கலாம். அவர்கள் ஒவ்வொருவரும் எனக்கு ஒவ்வொரு மறக்க முடியாத அன்பளிப்பைத் தந்திருக்கிறார்கள்.

அம்மா குடும்பத்தின் முதற் பிள்ளை. அவருக்கு அடுத்தவர் என் ஆசை அம்மா. ஆசை ஒரு கெட்டிக்காரி. எந்த விடயத்தையும் முன்னின்று செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர். நான் எப்போ கொழும்புக்குப் போனாலும் அவர் வீட்டில் தான் தங்கினேன். எனது பன்னிரெண்டாம் பிறந்த நாளிலும் அப்படித்தான். ஆசை எனக்கு ஒரு சின்ன நீல ஆங்கில அகராதியை பிறந்தநாள் பரிசாகத் தந்தார் (கொலின்ஸ் பதிப்பகத்தின் “புதிய இரத்தின அகராதி”). சொற்களைத் தவிர அதில் சொற்சுருக்கங்களும் பிறமொழிச் சொற்றொடர்களும் நிரைப் படுத்தப் பட்டுள்ளன. பன்னிரண்டு வயதில் எனக்கு இந்த அகராதியை வாங்கும் பணவசதி இருந்திருக்காது. இருந்திருந்தாலும், இந்த நல்ல அகராதியைத் தெரிந்தெடுக்கும் கூர்ந்துணர்வும் இருந்திருக்காது — என்னை விட்டிருந்தால் ஒரு மலிவான தரங்குறைந்த அகராதியைத் தான் வாங்கியிருப்பேன்! ஆனால், நல்ல அகராதி கிடைத்ததும் என் பதின்ம வயதுகளிலும் இருபதுகளிலும் அதனைப் மிகவும் பரவலாகப் பயன் படுத்தினேன். போன இடமெல்லாம் கூடவே எடுத்துச் சென்றேன் — மூன்று கண்டங்களுக்கும் ஆறு நாடுகளுக்கும் ஊடாக. இப்போ அது கந்தலாகக் கிழிந்து தொங்குகிறது, முதுகுத் தண்டு இல்லாமல், பின் அட்டை கழன்று போய். ஆனால் நான் ஆங்கிலத்தைச் சரளமாகவும் துணிவோடும் எழுதவும் படிக்கவும் முடிகிற நிலமைக்கு வருவதற்கு இந்த அகராதி தான் இன்றியமையாததாக இருந்தது. ஆங்கிலமூலப் படிப்பு வழக்கம் இல்லாத ஒரு நாட்டில், பிராந்தியச் சிற்றூரொன்றில் வளர்ந்த எனக்கு, ஆங்கிலத்தில் சரளம் பெறுவது சுலபமாக இருக்கவில்லை.

அம்மாவுக்கு இன்னுமொரு தங்கை, என்னுடைய சித்தி. பதின்மூன்று வயது வரை பெரும்பாலாக எனது அம்மம்மா வீட்டிலேயே வளர்ந்தேன். சித்தி உயர்தரப் படிப்பை முடித்துவிட்டு அம்மம்மாவுக்கு உதவியாக வீட்டிலேயே இருந்தார். அதனால், அம்மாவின் எல்லாச் சகோதர சகோதரிகளிலும் பார்க்க சித்தியோடு தான் நீண்ட நேரம் கழித்திருப்பேன். சித்திதான் குடும்பக் கதைகளின் அதிகாரபூர்வமற்ற பராமரிப்பாளர். குடும்பக் கதைகளைப் பொறுத்தவரை அவர் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம். அவர் சொல்லச் சொல்ல அந்தக் கதைகளையெல்லாம் நான் ஆர்வத்தோடு பஸ்மீகரம் செய்தேன். எனது தாத்தா சாகும்போது அம்மாவுக்கு இருபத்தொரு வயது. அவரின் கடைசித்தம்பிக்கு இரண்டு மட்டுமே! அந்த இழப்பு பிள்ளைகள் எல்லோரிலும் ஒரு அழிக்கமுடியாத வழுவை விட்டுப் போனது. சித்தியின் வர்ணனையில் தாத்தா ஒரு சான்றோன், எனது அம்மா ஒரு பொறுமையின் சிகரம்! தனது தாய்வழிக் கொள்ளுப்பாட்டனைப் பற்றியும் கதை கதையாகச் சொன்னார்: வீட்டு வாசலில் புகையிரத வண்டியை நிறுத்தித் தன் சுருட்டுப் பெட்டிகளை ஏற்றக்கூடிய அளவுக்கு செல்வந்தராக இருந்தவர் எண்ணறிவு இல்லாததால் இறுதியில் தன் செல்வம் முழுவதையும் இழந்தாராம். எனக்குக் குடும்பக் கதைகள் தெரிந்திருப்பதற்கான நன்றிக்கடன் சித்திக்குத்தான் உரித்து.

மூன்று பெண் பிள்ளைகளுக்குப் பிறகு நான்கு ஆண் பிள்ளைகள். அவர்களில் முதல்வர் எனது பெரியமாமா. எனக்கு ஆறு வயதாயிருக்கும்போதே அவர் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்று விட்டார். ஆகவே, பலவருடங்களுக்குப் பிறகு அவர் நாடு திரும்பும் மட்டும் அவரைப் பற்றிக் கடிதங்களாலும் புகைப்படங்களாலும் தான் எனக்குத் தெரியும். அவர் திரும்பும்போது எனக்குப் பதின்ம வயதுப் பருவம். ஒருமுறை எனக்குப் பதினேழு வயதாக இருக்கும்போது அவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். வெளிநாட்டிலே வாங்கிய விலையுயர்ந்த கமராவையும் கொண்டு வந்தார். எனக்கு அப்போது புகைப்படக்கலை பற்றி நல்ல மேலார்வம். நாற்பது வருடங்களுக்கு முன்னர் புகைப்படக்கலை ஒரு செலவுமிக்க, கடினமான, பொழுதுபோக்கு. இப்போ சர்வவியாபியாக இருக்கும் திறன்பேசிக் கமராக்கள் எல்லாம் கிடையாது. கமராவில் முதல் படச்சுருளைச் சரியாகப் பொருத்த வேண்டும். அது ஒரு தனிக்கலை — நுட்பமும் கவனமும் தேவை. அதில் பிழை விட்டால், உடனே தெரிந்து கொள்ளவும் முடியாது — முழுப் படச்சுருளிலும் உள்ள படங்களையெல்லாம் எடுத்து முடித்து (பொதுவாக 24 அல்லது 36 படங்கள்), படச்சுருளை உருவாக்கிப் படங்களை அச்சடிக்க ஒரு ஸ்டூடியோவுக்குக் கொண்டுபோன பிறகு தான் பிழைவிட்டது தெரியவரும். இதைத்தவிர, இப்போதைய கமராக்களில் இருக்கிற தானியங்கிக்குவியம் போன்ற ஆடம்பரமான அம்சங்கள் எல்லாம் அந்தக் காலத்தில் கிடையாது. கவனமாகக் கையாலேயே குவியத்தையும் கமராவின் துவாரத்தின் விட்டத்தையும் சரிசெய்து கொண்டால் தான் புகைப்படம் தெளிவாகவும் நேர்த்தியாகவும் வரும். அதில் பிழை விட்டால் படம் இருண்டோ கலங்கியோ போய்விடும். என்னுடைய ஆர்வத்தைப் பெரிய மாமா கண்டுகொண்டு எனக்குப் புகைப்படக் கலையின் அடிப்படைகளைக் கற்றுத் தந்து ஒரு சில படங்களை எடுக்கவிட்டார். பிறகு, அந்தக் கமராவை என்னிடம் கொஞ்ச நாள் வைத்து விளையாடும்படி தந்தார். என்னால் நம்பவே முடியவில்லை! ஒரு ஆர்வம் மிக்க பதினேழு வயதுக்காரனை நம்பி விலையுயர்ந்த கமரவைக் கொடுத்தது எவ்வளவு வலுவூட்டக் கூடிய ஒரு விடயம்! அந்தக் கோடை முழுக்க என்னிடம் இருந்த பணமெல்லாவற்றையும் படச்சுருள் வாங்கவே செலவிட்டேன். சிலவேளை தங்கை மாரை, அவர்களின் முற்றுமுழுதான சம்மதம் இல்லாவிட்டாலும், புகைப்படங்களுக்குப் போஸ் பண்ணவைத்தும், பாடசாலை நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் போகும் போது அதிவேகப் புகைப்படம் எடுத்து மகிழ்வித்தும், நான் அந்தக் கமராவால் ஒரு உன்னதமான அனுபவத்தைப் பெற்றுக்கொண்டேன்.

அடுத்தவர் பாலா மாமா. அவர் சுவாரசியமான தொலைப் பிரதேசங்களில், காடுகளுக்கு இடையேயெல்லாம் கிராம சேவகராகப் பணிபுரிந்தார். கதை சொல்வதில் வித்தகர். சித்தி குடும்பக்கதைகள் சொன்னமாதிரி பாலா மாமா சொன்னது விசித்திரமான கதைகள்: வேட்டைக்குப் போவது பற்றி (அவர் தானே வேட்டைக்குப் போனார் என்று நான் நினைக்கவில்லை, வேட்டைக்குப் போகிறவர்களிடம் காட்டிறைச்சி வாங்கிக்கொண்டு வருபவர், அவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்டிருக்கலாம். எப்படி வந்ததென்றாலும் அவர் சொன்ன கதைகளெல்லாம் சுவையானவை), வேடர்களைப் பற்றி, அப்படியெல்லாம். உயர்தர வகுப்புக்கு மேல் விஞ்ஞானம் படித்திருக்காவிட்டாலும் விஞ்ஞான அறிவார்வம் அவரிடம் இருந்தது. எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, அம்மம்மாவின் வீட்டுக்கு முன்னால் இருந்த தண்டவாளத்தின் மேல் படுத்திருந்தபடி, நட்சத்திர ஒளியில் உராய்வைப்பற்றி அவர் சொன்ன கதை. உராய்வு என்பது இல்லாவிட்டால் ஒரு பக்கீஸ் பெட்டியைக் கவிழ்த்துப் போட்டு அதன் மீது ஏறியிருந்து ஒரு உந்து உந்தினால் கொழும்பு வரை நிற்காமலே போய்விடலாம். எத்தனையோ போரடிக்கிற விஞ்ஞான வகுப்புகளை விட இப்படி ஒரு சுவாரசியமான சிந்தனைப் பரிசோதனை, ஒரு பத்து வயதுப் பையனின் கற்பனையைச் சிறகு கொண்டு பறக்க வைக்கக் கூடியது!

மூன்றாவது நேசாமாமா. அவர் “அச்சம்” என்ற சொல்லுக்குப் பரிச்சயமில்லாத ஒரு துணிச்சல்காரன். அவர் என் உள்ளத்தைத் தொட்ட இரண்டு நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.

முதலாவது. நான் சிறுவனாக இருந்தபோது எழுதுவது என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம். “கண்ணுக்கினியாள்” என்ற ஒரு சரித்திர நாவலின் கதாபாத்திரத்தின் பெயரால் ஈர்க்கப்பட்டு, எனக்கு “எழுத்துக்கினியவன்” என்ற புனைபெயரைத் தேர்ந்தெடுத்தேன். என் எழுத்துக்களின் தரம் கொஞ்சம் மட்டுத்தான். எழுதுவது எப்படி என்ற நேர்த்தியான பயிற்சியின்மையாலோ அல்லது சரியான முன்மாதிரி இல்லாததாலோ, நான் எழுதியவை ஒன்றும் பிரசுரிக்கப்படவில்லை. ஆனால் எழுதுவது எனக்கு ஆழ்ந்த மகிழ்ச்சியைத் தந்தது. நேசாமாமா இதை இனங்கண்டுகொண்டார். அப்போது அவருக்கு ஒரு அச்சகத்தில் வேலை. என் புனைபெயரை இட்டு ஒரு கடிதத்தாள் புத்தகம் அச்சடித்துத் தரலாம் என்றார். அத்தோடு நான் எழுதிய ஒன்று இரண்டையும் அச்சடிக்கலாம் என்றார். எனக்கு வந்த மகிழ்ச்சி உங்களுக்கு நினைத்தும் பார்க்க முடியாது. நல்ல வேளையாக அச்சடிக்க முதல் மாமா என் பெற்றோரிடம் அனுமதி கோரினார். அவர்கள் உடனேயே திட்டவட்டமாக மறுத்துவிட்டார்கள். ஏனென்றால் அப்போது குழம்பியிருந்த என் படிப்புக்கு இது இன்னுமொரு கவனச்சிதறலாக இருந்திருக்கும் (அது என் எட்டாம் வகுப்பு முடிந்திருந்த காலம், எனக்குக் கணிதத்துக்கு 36 புள்ளிகள், விஞ்ஞானத்துக்கு 28! அம்மா அப்பா குய்யோ முறையோ என்று ஏற்கெனவே பதைத்துப் போயிருந்தார்கள்). எது எப்படியென்றாலும் ஒரு வயது வந்த பெரியவர் சின்னப்பையனான என் எழுத்துப் பழக்கத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கவனம் செய்தது என் சுயமதிப்புக்குப் பெரிய உந்துதலைத் தந்தது.

இரண்டாவது: உள்நாட்டுப் போர் தீவிரமாக, நான் இந்தியா செல்ல முடிவு செய்தேன். அப்போது (எங்கள் மாதிரி ஒரு நடுத்தரக் குடும்பத்துக்குக் கட்டுப்படியாகக் கூடிய) இந்தியப் பயண வழி தலைமன்னாரிலிருந்து மூன்று மணித்தியாலம் பயணிக்கிற கப்பல். யாழ்ப்பாணத்திலிருந்து தலைமன்னாருக்குப் போவதென்றால் ஒரு அலுப்புமிக்க 6–7 மணி பஸ் பிரயாணம். அப்பா என்னிடம் யாழ்பாணத்திலேயே விடைபெற்றுக்கொண்டார். நேசாமாமா அப்போது வவுனியாவில் வேலை செய்து கொண்டிருந்தார். தலைமன்னாருக்கும் யாழ்பாணத்துக்கும் இடையில் இருந்த வவுனியாவில் பஸ் தரித்தபோது நேசாமாமாவும் விடைசொல்ல வந்தார். நான் என்னுடைய ஒரு நண்பனுடனும் அவரது தந்தையாரோடும் பயணம் செய்தேன். தந்தையார் ஒரு தபாலதிபர். ஆகவே தலைமன்னாரின் தபாலதிபரின் வீட்டிலேயே இரவு தங்கி அடுத்த நாள் விடிந்ததும் கப்பலேறும் திட்டம். விடிகாலை 3 மணிபோல வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. என்னவென்றால் நேசாமாமாவும் ஒரு நண்பரும் தலைமன்னாருக்கே எங்களை வழியனுப்ப வந்துவிட்டார்கள். நாங்கள் எங்கே தங்கியிருக்கிறோம் என்று தெரியாததால் தலைமன்னாரின் மடம் சத்திரமெல்லாம் தேடிப் பார்த்து ஏதோ விதமாக தபாலதிபரின் வீட்டு வாசலுக்கு வந்துசேர்ந்தார்கள் (இன்றுவரை அவர் நான் எங்கேயிருக்கிறேன் என்பதை எப்படிக் கண்டு பிடித்தார் என்பது எனக்குப் புரியவில்லை!). 1984 ஆம் ஆண்டில் வட இலங்கையில் எங்கும் இராணுவ ஆதிக்கம். எங்கு பார்த்தாலும் படைவீரர்களும் சோதனைச் சாவடிகளும். இராணுவத்தினர் எப்போதும் பதற்றமாகவே இருப்பார்கள் ஏனென்றால் எந்த நேரமும் தமிழ்ப் போராளிகள் திடீரென்று தாக்கக் கூடும். அந்தப் பீதி அவர்களின் ஆள்காட்டி விரலை துப்பாக்கியின் விசை வில்லிலேயே வைத்திருக்கும். சாதாரணத் தமிழ் இளைஞர்கள் படையினர் பதற்றத்துடன் இருக்கக் கூடிய நிலைமைகளைத் தவிர்த்துக்கொள்வார்கள். நேசாமாமாவுக்கு முப்பத்திமூன்று வயது. இரவிரவாக தலைமன்னாருக்குப் பயணம் செய்வது கொஞ்சம் பயமாறியாத காளைக் குணம். அதிலும் பார்க்க ஆபத்தானது நள்ளிரவில் ஆரையோ தேடி மடம் மடமாக ஏறி இறங்குவது. ஆனால் நேசாமாமா அதையே செய்தார். அடுத்த நாள் காலை கண்பார்வையிலிருந்து மறையும் மட்டும் கடற்கரையிலிருந்து பார்த்தே விடை சொல்லியனுப்பினார். அபாயகரமான இந்தச் செய்கை என் நெஞ்சத்தின் ஆழத்தைத் தொட்டது. நான் நாட்டை விட்டு முதல்முறையாக வெளியேறி முன்பின் யாரையும் தெரியாத ஒரு நாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தேன், திரும்பி வருவேனா இல்லையா என்று கூடத் தெரியாமல். அப்படியான நிலைமையில் ஆபத்து என்றும் பாராமல் என்னை வழியனுப்ப வந்தது என்னைத் தொட்டது.

குடும்பத்தின் கடைக்குட்டி ரவிமாமா. அவருக்கு என்னை விட பத்து வயதுதான் கூட. ஆகவே பெரியவரும் இல்லாத சமவயதினரும் இல்லாத ஒரு இக்கட்டான வயது வித்தியாசம். எனது பெற்றோர் யாழ்ப்பாணத்தில் வீடு கட்டப் புறப்பட்ட போது அந்த வேலையை நாளுக்கு நாள் கொண்டு நடத்த யாழ்ப்பாணத்தில் யாருமில்லாததால், பக்கத்து வீட்டிலிருந்த அம்மாவின் மாமாவை (சரியாகச் சொல்வதானால், ஒன்று விட்ட மாமா, ஆனால் எந்த மாமாவையும் விட நெருக்கமானவர்) உதவி கேட்டார்கள். அவருக்கு வயது ஐம்பதுகளில். பெரிய குடும்பத்தைப் பார்க்க வேண்டிய கடமை இருந்தது. ஆகவே நாளுக்கு நாள் முகாமை ரவிமாமாவின் தலையிலேயே விழுந்தது. அதை ரவிமாமா வெற்றிகரமாகச் செய்ததைக் கண்டேன்: காலையில் துவிச்சக்கர வண்டியில் சீமெந்துப் பையைக் காவிகொண்டு போவதும், கிழட்டு மேசனுக்கும் குள்ளநரித் தச்சனுக்கும் தாக்காட்டுவதும் — அவர்கள் அனுபவமில்லாத இளைஞனுக்குக் கொஞ்சம் பூச்சாண்டி காட்டி ஏமாற்றலாம் என்று நினைத்திருக்கலாம். அவருக்கு அனுபவமிருக்கவில்லைதான். ஆனால் அவர்கள் ஏமாற்ற முயலும் போது அதைக் கண்டறிந்து, இரண்டு மடங்கிலும் வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றாலும் காத்திரமாக எதிர்க்கும் வல்லமை இருந்தது. ஒருவர் உங்களைத் தவறாகக் குறைத்து மதிப்பிடும் நிலமை வரும்போது அதை நீங்கள் ஒரு பாசுபத அஸ்திரமாகவே பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்து கொண்டேன். அந்த வீடு ஈழ யுத்தத்துக்குப் பலி போய்விட்டது. ஆனால் அதிலிருந்து கொண்ட படிப்பினை இன்னும் என்னுடன் இருக்கிறது.

கண்மூடித்தனமாகவோ விலையுயர்ந்ததாகவோ அன்பளிப்புகளைத் தேடுவதைத் தவிருங்கள். ஆனால் ஒரு இளம்பிள்ளைக்கு அர்த்தபூர்வமான அன்பளிப்பு கொடுக்கும் வாய்ப்பு வந்தால் அதை நழுவ விடாதீர்கள். பிரச்சனை என்னவென்றால் எந்த அன்பளிப்பு அர்த்தபூர்வமானது என்று கண்டறிவதுதான்.

13 யூன் 2023

Leave a Reply

Trending

Discover more from eLuttukku / எழுத்துக்கு

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading