Covered in bail gari on bullock cart” by Drregor, CC BY-SA 2.0

ஆச்சி குரலெடுத்துக் கத்தினாள், “தம்பி! இங்க ஓடியா ராசா!” நடராஜா தலையைத் திருப்பிப் பின்னால் பார்த்தான். தெருவிலிருந்து வளவுக்கூடாகச் செல்லும் பாதையின் முடிவில் அந்த மண் குடிசை இருந்தது. சாணத்தையும் மஞ்சளையும் தண்ணீரில் கரைத்துக் குடிசைத் திண்ணையை மெழுகியிருந்தார்கள். புது மெழுகின் பொலிவு தூரத்திலிருந்துகூட நன்றாகத் தெரிந்தது. குடிசைக் கதவுக்கு முன்னால் இருந்த தலைவாசலுக்கு அருகில் ஆச்சி தரையில் உட்கார்ந்திருந்தாள்.

ஒரு முனையில் கொக்கி போல வளைந்திருந்த கம்பியொன்றை நடராஜா கையில் வைத்திருந்தான். ஆரக்கால்களை இழந்த ஒரு பழைய சில் நிலைக்குத்தாக நிற்பதற்கு அந்தக் கொக்கி பட்டும் படாமலும் பிடித்திருந்தது. ஆச்சி இருந்த இடத்தை நோக்கி நடராஜா ஓட, அவனது உந்துவிசை சில்லை முன்னோக்கி உருள வைத்தது. நகரத்திலிருந்து வரும் நவநாகரீக இளைஞர்கள் ரோயல் என்பீல்ட் புல்லட் மோட்டர்சைக்கிள்களில் கலாதியாக ஒடிவருவது போலத் தானும் ஓடுவதாக அவன் பாவனை செய்தான். தேவையான ஒலி விளைவுகள் எல்லாம் அவன் வாயிலிருந்தே வந்தன. மோட்டர்சைக்கிள் தன் வேகத்தைக் கூட்டி, மானசீகமான பாதசாரிகளை விலத்தச் சொல்லி  கொம்பு ஊதி, ஆச்சியைச் சுற்றி ஒரு சுற்றுப் போட்டு அவளுக்கு முன்னாலே போய் நின்றது.

“இண்டைக்கு அக்கா பள்ளிக்கூடத்துக்குத் திரும்பிப் போகவேணும். தம்பிமுத்து வீட்டை ஒடிப் போய் வண்டிலைக் கொண்டு வரச்சொல்லு.” நடராஜாவின் முகம் மலர்ந்தது. தம்பிமுத்து வீட்டுக்குக் குறைந்தது அரை மைலாவது போக வேண்டும். புல்லட்டில் அது ஒரு நல்ல ஓட்டம்தான். ஒரு பதிலும் சொல்லாமல் துப்பாக்கியால் சுட்ட தோட்டா மாதிரி புல்லட் சில் பீறிட்டுக்கொண்டு பறந்தது. திகைத்துப் போன ஆச்சி ஒருமாதிரி சுதாகரித்துக்கொண்டு, “மதியத்துக்கு முதலே வரச்சொல்லு!” என்று கூவமுதலே நடராஜா முற்றத்தைக் கடந்து தெருவில் ஏறிவிட்டான். முதல் நாள் இரவு ஊரில்லுள்ள தோட்டக்காரர் எல்லோரும் செய்த நேர்த்திக்கடன்களுக்குப் பதில் போல நல்ல மழை பெய்திருந்தது. வழமையாகக் காய்ந்து வெடித்துப் போய் இருக்கும் நிலத்தில் கசகசவென்று ஈரத்தன்மை. பாழாய்ப்போன செம்பாட்டு மண்! தூணிலும் துரும்பிலும் கசிந்து வியாபிக்கும் செம்பாட்டு மண். ஊரிலுள்ள எல்லாச் சிறுவர்களையும் போல நடராஜாவின் உள்ளங்கால்களிலும் கணுக்கால்களிலும் செம்பாட்டுக்கயர் படர்ந்திருந்தது. ஊர்ச் சிறுவர்களுக்கு இந்தச் செம்பாட்டுக்கயர் பெரிய ஆற்றாமை. உடலிலும் ஆடைகளிலும் ஏறுவதைத் தவிர்க்கமுடியாத செம்பாட்டுக்கயர்களை அறவே வெறுத்தார்கள். அதுவும் அயலூர்ப் பிள்ளைகள் “செம்பாட்டுக்கால்” என்று நையாண்டி செய்வது தாங்க முடியாத வேதனை. செம்பாட்டுச் சாபம் அவர்களைக் ‘கிராமத்தான்’ என்று இனங்காட்டியது. பிற்காலத்தில் புலம்பெயர்ந்து வனவாசம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் வந்தபோது இழந்துபோன செம்பாட்டுக் கிராமியத்தை நினைத்து ஏங்கி அதை ஒரு பெருமைச் சின்னமாக அணிந்துகொள்வார்கள். ஆனால்  சிறுபிராயத்தில் பள்ளிக்கூட இடைவேளை நேரங்களில் நையாண்டிகளை எதிர்கொள்ளும் போது அத்தகைய உணர்ச்சி எழவேயில்லை!

தம்பிமுத்தரின் வளவுக்குள் நடராஜா திரும்பியபோது மாட்டுக் கொட்டகைக்கருகில் வண்டில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்ததைக் கண்டான். அது குனிந்து பூமாதேவிக்கு வந்தனம் செய்வது போல் நுகத்தடியைத் தரையில் வைத்திருந்தது. தூரப் பயணங்களுக்கு ஆட்களை ஏற்றிக் கொண்டு போகக்கூடிய வில்வண்டி. சரக்கு வண்டிகளைப் போலல்லாது பயணிகளை வெயிலிலும் மழையிலும் இருந்து பாதுகாக்க அதற்குப் பரவளைய வடிவத்தில் தென்னோலைக் கிடுகுகளால் கூரை வேயப் பட்டிருந்தது. வண்டிலுக்குப் பக்கத்தில் கிழட்டுக் காளை மாடு அதன் காலடியில் குவித்திருந்த வைக்கோலை அரைமனத்தோடு அசை போட்டுக் கொண்டிருந்தது. கிழவர் தம்பிமுத்து திண்ணைச் சுவரில் சாய்ந்தபடி அரைத்தூக்கத்தில் இருந்தார். மனிதனும் மிருகமும் ஒரே மாதிரியான வீரியமிழந்த சலித்துப் போன முகபாவத்தையே கொண்டிருந்தார்கள். காலம் போகப் போக மனிதர்களுக்கும் அவர்களது மிருகங்களுக்கும் ஒருமித்த முகச்சாயல் வரும் என்பதில் உண்மையிருக்கலாம். “ஆச்சியக்காவைப் பள்ளிக்கூடம் கொண்டு போக வண்டிலைக் கொண்டு வரட்டாம்,” என்று கத்தியபடியே நடராஜா தம்பிமுத்தரின் முற்றத்தில் ஒரு வட்டம் போட்டுவிட்டு நிற்காமலே தன் கற்பனை மோட்டார்சைக்கிளைத் திருப்பிக் கொண்டு பறந்தான்.

***

சூரியன் உச்சி வானத்தைக் கடந்து மேற்கை நோக்கி இறங்கத் தொடங்கியது. தம்பிமுத்தரின் வண்டிலின் சலனத்தைக் கூடக் காணோம். ஆச்சி பொறுமை இழக்கும் கட்டத்துக்கு வந்து விட்டாள். ஆனால் பவளமோ அழாத குறைதான். பொழுது சாய்வதற்கு முதல் பள்ளிக்கூடம் போய்ச் சேர்ந்து விட முடியாதோ என்ற ஆதங்கம். முச்சந்தியில் வண்டில் திரும்புவதை நடராஜாதான் முதலில் கண்டான். “ஆச்சியக்கோய், ஆச்சியக்கோய், வண்டில் வருது,” என்று கத்தியபடி வளவுக்குள் ஒடிப்போனான். பவளம் உண்மையில் நடராஜாவின் சின்னம்மா, அவனது தாயின் கடைசித் தங்கை. ஆனால் நடராஜாவை விட சில வருடங்கள் தான் மூத்தவள். ஆகவே அவளை “அக்கா” என்று விளிக்கப் பழகி விட்டான். கிராமத்தில் எல்லோரும் அக்காவோ அண்ணாவோ மாமாவோ மாமியோதானே, முன்பின் தெரியாதவர்கள் கூட. அப்படி விளிப்பது அன்பினதும் மரியாதையினதும் அடையாளம். பவளம்தான் நடராஜாவின் ஆச்சியின் வீட்டில் எஞ்சியிருந்த கடைசிப் பிள்ளை. ஆகவே அவளை “ஆச்சியக்கா” என்றே அழைத்தான்.

தம்பிமுத்துவின் வண்டில் வளவுக்குள் திரும்பித் தலைவாசல் வரை உருண்டு வந்தது. வண்டிலின் கூரை மட்டும் வைக்கோல் நிரப்பப் பட்டிருந்தது. பலமணிநேரப் பயணம் சென்று திரும்ப மாட்டுக்குத் தீனி தேவையல்லவா! பவளம் தனது பெட்டியை மிஞ்சியிருந்த கொஞ்ச இடத்தில் ஒருமாதிரித் திணித்துவிட்டு அதன் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டாள். “கெதியாய்ப் போ,” என்று ஆச்சி விரட்டினாள், “நேரம் பிந்தி வந்துட்டாய்.”

வண்டில் திரும்பித் தெருவை நோக்கி உருள ஆரம்பித்தது. நடராஜாவும் தன் ரோயல் என்பீல்ட் புல்லட்டைத் திருப்பி வண்டியோடு பக்கத்தில் ஓட ஆரம்பித்தான். பிறகு ஏதோ நினைத்தவனாகச் சில்லைக் கடாசி எறிந்து விட்டு வண்டிலின் விளிம்பைப் பிடித்தபடி ஓடத் தொடங்கினான். ஓடுவதை விட நடந்தான் என்று தான் சொல்ல வேண்டும். ‘உலகத்திலேயே மெல்லமாப் போற வாகனம் தம்பிமுத்தற்றை வண்டில் தான்,’ என்று நினைத்தான். அவன் கவனம் பாதையின் இருபுறங்களிலும் போய் மறையும் காட்சிகளில் படிந்தது. இரண்டு புறமும் செம்மண் செல்வத்தில் திளைத்த தோட்டங்கள்: புகையிலைத் தோட்டம், மிளகாய்த் தோட்டம், வெங்காயத் தோட்டம். எகிறி வீசும் பிற்பகல் வெயிலால் தோட்டங்களில் யாருமே இருக்கவில்லை. விவசாயிகள் விடிய முதலே நீர் இறைக்க வந்திருப்பார்கள். ஒருவர் உறுதியான பனைமரத் துலாவில் ஏறி முன்னும் பின்னுமாக நடக்க மற்றொருவர் துலாவின் நுனியில் தொங்கும் வாளியால் தண்ணீர் அள்ளியள்ளி இறைப்பார். மிஞ்சியிருப்பவர்கள் மண்வெட்டியால் பாத்தி கட்டி எல்லாச் செடிகளுக்கும் சரியான அளவு தண்ணீர் பாய வழி செய்வார்கள். 

வெயிலில் நெளியும் புழுப்போல அந்த வீதி வளைந்து வளைந்து சென்றது. கிராமத்து வீதிகள் நில அளவையாளர்களால் திட்டமிட்டுக் கட்டப்பட்டவையல்ல. புராதன நடைபாதைகள் தான் காலப்போக்கில் வீதிகளாக உருமாறின. இப்போது உள்ள வடிவத்துக்கு வரமுதல் எத்தனை தலைமுறைகளின் எல்லைச் சண்டைகளை அவை கண்டிருக்கலாம்! சகோதரர்களுக்கு இடையே தலைமுறைக் “கோபம்” தூண்டிவிடும் எல்லைத் தகராறுகள், வாழ்நாள் முழுவதுமே கோபம் சாதித்துப் பேசாமல் விடச்செய்யும் எல்லைச் சண்டைகள்! சற்றே சரிந்திருந்த வண்டிற் சக்கரத்தின் ‘றத்-தத்’ தாளலயத்தில் மயங்கிப் போய்  நிலையான வேகத்தோடு ஒடிக் கொண்டிருந்த நடராஜா நிமிர்ந்து பவளத்தைப் பார்த்த போது அவள் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

பவளம்தான் குடும்பத்தின் கடைக்குட்டி. அவளது சகோதர சகோதரிகள் அவளைவிடப் பல ஆண்டுகள் மூத்தவர்கள். அந்தக் காலத்திலே கிராமத்தவர் யாரும் சில வருடங்களுக்கு மேல் பள்ளிக்கூடம் போவதில்லை. ஆண்பிள்ளைகள் தோட்ட வேலைக்கோ அல்லது தெற்கில் சுருட்டுக்கடைகளில் எடுபிடி வேலை செய்வதற்கோ அனுப்பப் படுவார்கள். ‘சுருட்டுக் கடை’ என்றால் சுருட்டு மட்டும் விற்கிற கடையென்று நினைத்து விடாதீர்கள்! ‘திறம் யாழ்ப்பாணம் நல்லெண்ணை’யிலிருந்து தோடம்பழ இனிப்பு வரை எது வேண்டுமென்றாலும் கிடைக்கும்! பெண்பிள்ளைகள் ஒரு நல்ல வரன் வரும்வரை வீட்டு வேலைகளில் ஒத்தாசையாக இருப்பார்கள். பவளமும் அப்படிச் செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பவளத்தின் கனவுகளோ வேறு! தன் படிப்பைத் தொடரத்தான் விரும்பினாள். பவளத்தின் தாய் அவளுக்கு உறுதியான ஆதரவு. பவளத்தின் படிப்பை நிற்பாட்ட வேண்டுமென்ற நினைத்த குடும்பத்து ஆண்களுடன் விட்டுக் கொடுக்காமல் போராடினாள், படிப்பைத் தொடரப் பத்து மைல்களுக்கு அப்பால் உள்ள விடுதிப் பாடசாலை ஒன்றுக்கு அனுப்புவதால் வந்த மேலதிகச் செலவுகளையும் பார்க்காமல். 

அற்பைச் சந்திக்கு வண்டில் வந்தபோதுதான் பவளம் தன் மோனம் குலைய, வண்டிலோடு பையன் ஓடிவருவதைக் கவனித்தாள். கலங்கிப் போய்ப் பீதியுடன் “வண்டிலை நிப்பாட்டுங்கோ,’ என்று கூவினாள். தம்பிமுத்தர் தன் சொந்த மோனத்திலிருந்து திடுக்கிட்டு விழித்து மாட்டின் கயிறை இழுத்தார். வண்டில் சரேலென நின்றது.

“ஏன் இவ்வளவு தூரம் வந்தனீ?” பவளம் நடராஜாவை கடிந்து கொண்டாலும் அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திரும்பி வீட்டுக்குப் போக நேரம் போதாது. பையனைத் தனியாக வீட்டுக்கு அனுப்புவதை நினைக்கவே அவளுக்கு நெஞ்சு படபடத்தது. அந்த வளைந்த பாதைகளில் கட்டாயம் வழிதவறிப் போவான்  என்பதில் அவளுக்கு ஐயம் ஏதுமில்லை. “நீ தனியாத் திரும்பிப் போனால் துலைஞ்சு போவாயே!” நடராஜாவுக்கோ தான் வழிதவறாமல் வீட்டுக்குப் போகலாம் என்று நன்றாகவே தெரியும். அந்த ஊர்ப் பாதைகளெல்லாம் அவனுக்கு அத்துப்படி. ஆனால் வாயைப் பொத்தியபடி மௌனமாக இருந்தான். பவளத்தின் சிந்தனை எங்கே போகிறது என்று அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. அதில் அவனுக்கு எந்தவித ஆட்சேபணையும் இருக்கவில்லை! “வண்டிலில ஏறு. நீ எங்களோட பள்ளிக்கூடம் மட்டும் வந்திட்டுத் தம்பிமுத்து ஐயாவோட வண்டிலிலயே திரும்பிப் போ.” அவள் சொல்லி முடிக்க முதலே நடராஜா வண்டிலில் தாவி ஏறிக்கொண்டான். வாயெல்லாம் பல்லாக, “சரி ஆச்சியக்கா!” என்றான்.

வண்டில் மீண்டும் ஆமை போல ஊர ஆரம்பித்தது. ஒரு யுகாந்திரத்துக்குப் பிறகு அது வேகத்தைக் குறைக்க, மண்ணின் நிறம் மாறிவிட்டதை நடராஜா கவனித்தான். தன் ஊரிலிருந்து மண்ணின் நிறமே மாறிவிடும் அளவுக்குத் தூரப் பயணம் செய்ததை நினைக்க அவனுக்கு அதி உற்சாகமாக இருந்தது. அடுத்ததாக வரப்போகும் அனுபவமும் அவனது ஆவலைத் தூண்டியது — ஆச்சியக்கா கதைகதையாகச் சொன்ன பள்ளிக்கூடம். வண்டில் சந்தியால் திரும்பியதும், ஒரு பச்சை நிறத் தலைவாசலின் கீழ் பள்ளிக்கூடத்தின் பிரம்மாண்டமான பச்சை நிற வாயிற்கதவு தெரிந்தது. இரண்டு புறமும் இருந்த தூண்களிலிருந்து உயரமான பச்சை மதில்கள் பள்ளிக்கூடத்தை முற்றிலும் சூழ்ந்து வளைத்தன. பெண்கள் பாடசாலைக்கு முற்றுமுழுதான பாதுகாப்பு தேவைதானே.

காவலாளி பவளத்தை இனங்கண்டு கொண்டதால் அந்தப் பாரிய வாயிற்கதவுகளைத் திறந்துவிட்டான். வண்டில் ஒரு மணற்பாதையில் இன்னுமொரு பத்து நிமிடம் உருண்டு போய் மாணவர் விடுதிக்கு முன்னால் தரித்தது. பவளத்தின் நண்பிகள் நீண்ட விடுமுறைக்குப் பிறகு பவளத்தைக் கண்ட குதூகலத்தில் துள்ளிக் குதித்தபடி ஓடி வந்தார்கள். அப்போதுதான் பவளத்துக்குப் பின்னால் ஒளிந்து நிற்கும் சிறுவனைக் கண்டார்கள். “தம்பீ!” என்று எல்லோரும் ஒருமித்துக் கூவியபடி பையனைச் சூழ்ந்துகொண்டு அவன் தலையைக் கோதியும், கன்னத்தைக் கிள்ளியும், பாசங் கொட்டினார்கள். நடராஜா திகிலுடன் பின்வாங்க எத்தனித்தான். ஆனால் அவன் ஒரு பெரிய பையன் அல்லவா? ஆகவே பல்லைக் கடித்துக்கொண்டு சகிக்க முற்பட்டான்.

விடுதியின் பொறுப்பாசிரியை கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். உடனே பவளத்தின் நண்பிகள் பின்வாங்கி அமைதியானார்கள். நடராஜா அவருக்கு மானசீகமாக நன்றி சொல்லிக்கொண்டான். அவர் ஒரு ஐம்பது வயது மட்டில் இருக்கக் கூடிய அமெரிக்கப் பெண்மணி. 

“வா, வா, பவளம்,” என்று வரவேற்றார்.  மற்றப் பெண்களைப் பவளத்தின் பெட்டியை உள்ளே கொண்டு போவதற்கு உதவி செய்யுமாறு பணித்தார். அப்போதுதான் அங்கே ஒரு சிறு பையன் நின்று கொண்டிருப்பதைக் கண்டார். “யாரிது?” என்று கறாரான தொனியில் கேட்டார்.

“எண்ட பெறாமகன்,” பவளம் தயங்கியபடி சொன்னாள். பிறகு அவசரமாக, “அவன் சும்மாதான் வண்டிலில வந்தவன். இப்ப உடனேயே வண்டிலோடு திரும்பிப் போயிடுவான்,” என்று விளக்க முனைந்தாள்.

பொறுப்பாசிரியை பவளத்தை முறைத்துப் பார்த்தார், “பொழுது சாய்ந்ததும் இருட்டடிப்பு என்று உனக்குத் தெரியாதா?”

அப்போதைய மகாயுத்தம் வெகுதூரத்தில் தான் நடந்துகொண்டிருந்தது. ஆனால் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் யப்பானியர் திருகோணமலையில் குண்டு போட்டிருந்தார்கள். ஏனென்றால் அது ஒரு பிரித்தானியப் பேரரசின் மூலோபாய முக்கியம் மிகுந்த துறைமுகம். ஆகவே முன்னெச்சரிக்கையாகப் பிரித்தானிய காலனித்துவ நிர்வாகம்  இரவு நேர இருட்டடிப்புக் கட்டளை இட்டிருந்தது.

“இண்டைக்கு இரவு அவர்கள் இங்கே தங்கிட்டு விடிந்ததும் போகலாம்,” என்று சொல்லிவிட்டுப் பொறுப்பாசிரியை உள்ளே போய்விட்டார்.

தம்பிமுத்தர் மாட்டைக் கொட்டிலுக்குப் பின்னால் அழைத்துச் சென்று வண்டிலுக்குள் ஏறிப் படுத்துக்கொண்டார். தூரப் பயணங்களில் வண்டிலிலேயே தூங்குவது அவருக்குப் புதிதல்ல. இது ஒரு பெண்கள் பாடசாலை. அவருக்கு தூங்குவதற்கு வேறெந்த இடமும் கிடையாது. மற்ற எல்லோரும் விடுதிக்கு உள்ளே போனார்கள். நடராஜாவும் தயங்கித் தயங்கி அவர்களைப் பின் தொடர்ந்தான். ஒரு பெண்கள் விடுதியில் அன்றிரவு தூங்க வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு வந்துவிட்டதே! ஒரு பெரிய பையன்! இதைக் கேள்விப் படும்போது அவனுடைய நண்பர்கள் என்ன சொல்வார்கள்?! தன்மானமுள்ள எந்த எட்டு வயதுப் பையனும் பெண்களைக் கண்டாலே தூர ஒடிவிடுவார்கள். பெண்கள் விடுதியில் எப்படித் தங்குவது!

விடுதியின் வாசலுக்கு அருகே இருந்த ஒரு சிறு அறைதான் விடுதியின் நூலகம். அதன் சுவர்கள் எல்லாவற்றிலும் புத்தகத் தட்டுகள். ஒரு உயரமான பெண், “தம்பிக்கு வாசிகசாலையில் படுக்கை போடலாம்!” என்று சொன்னபடி ஒரு தோழியோடு எங்கேயோ உள்ளே ஓடிப்போய் மூன்று பலகைகளைக் கொண்டு வந்து தரையில் போட்டாள். “தம்பி, நீ இதிலே படுக்கலாம்,” என்று நடுவிலிருந்த பலகையைச் சுட்டிக் காட்டினாள். பிறகு பவளத்தைத் திரும்பிப் பார்த்து, “பவளம், நீ பயப்படாத. நாங்கள் தம்பியோடு துணைக்குப் படுக்கிறம்!” என்றாள்.

நடராஜாவுக்கு அதுக்கு மேலே தாங்க முடியவில்லை. விக்கிவிக்கி அழத்தொடங்கினான்.

அன்றிரவு அவன் நிம்மதியாகப் பவளத்துடன்தான் அவளின் கட்டிலிலேயே தூங்கினான்.

Leave a Reply

Trending

Discover more from eLuttukku / எழுத்துக்கு

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading