இது 1993ஆம் ஆண்டில் எழுதிய ஒரு கட்டுரையின் தமிழாக்கம்.


பட மூலம்: PxHere

கல்கத்தாவுக்கு அருகில் உள்ள ஒரு சிறுநகரமான கரக்பூரில் இருக்கிறது இந்தியாவின் முதலாவது இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி). அங்கே தான் புலம்பெயர்ந்து ஓடிப் போய் என் இளமானிப் பட்டப் படிப்பை மேற்கொண்டேன். ஒரு சராசரி ஐஐடி மாணவனுக்கு இளமானிப் படிப்புக்குப் பிறகு இயல்பாக வரும் அடுத்த கட்டம், மேற்படிப்புக்கு அமெரிக்கா போவதுதான். ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான ஐஐடி மாணவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதிலும், GRE, TOEFL, AGRE போன்ற அனுமதிப் பரீட்சைகளுக்கு விழுந்து விழுந்து படிப்பதிலும், ஆசிரியர்களிடமிருந்து பரிந்துரை கடிதங்கள் பெற்றுக் கொள்வதிலுமே ஏதோ புனித யாத்திரைக்குத் தேவையான சடங்கு செய்பவர்கள் போலச் சிரத்தையாகச் செய்வார்கள். இந்த யாத்திரைக்குத் தேவையான மூலோபாயத் தந்திரங்கள்,பரம்பரைச் சொத்துபோலப் பேணிக் காத்து ஒரு தலைமுறை மாணவர்களிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு வழங்கப் படுவன.

எனது முதலாவது வருடத்தில் “அடுத்த கட்டம் என்ன?” என்ற கேள்வியை பற்றி நான் பெரிதாகக் கவலைப் படவில்லை. அந்தக் காலப் பகுதியில் தான் எனது அப்பாவின் சகோதரர் முழுக்குடும்பத்தையும் கனடாவுக்கு அழைப்பிக்க ஸ்பொன்சர் செய்திருந்தார். கனடாவில் கணினியல் துறையில் பேர்போனது வாட்டர்லூ பல்கலைக்கழகம் என்று தூக்கிவைத்த ஒரு செய்திப்பத்திரிகைத் துணுக்கையும் எனக்கு அனுப்பியிருந்தார். அதை நான் உடனேயே எங்கேயோ கைமாறி வைத்துத் தொலைத்துவிட்டேன்.

உள்நாட்டு யுத்தம் எதுவும் இல்லாமால் தொடர்ந்து இலங்கையிலேயே கோட்டை விடாமல் படித்திருந்தால், மேற்படிப்புக்குப் போவதற்கு ஏதாவது அரசாங்கப் புலமைப் பரிசில் கிடைத்திருக்கலாம். அல்லது இலங்கையிலேயே ஏதாவது வேலைக்குப் போயிருக்கலாம். பள்ளிக்கூடப் பருவத்தில் கொஞ்சம் நன்றாகவே படித்ததால், மேற்படிப்புக்குப் போகும் வாய்ப்பு கிடைக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். அந்தக் காலத்தில் மேற்படிப்பு என்றால் வெளிநாட்டில்தான்.

அதாவது என்ன சொல்ல வருகிறேனென்றால், மேற்படிப்புக்காக ஒருகாலத்தில் வெளிநாடு போகலாம் என்ற எண்ணம் எனக்குக் கரக்பூர் வரமுதலேயே பரிச்சயமானதொன்று. இலங்கையில் ஒரு சாதாரணப் பொறியியற் பட்டதாரிக்கு இப்படியான எண்ணம் பொதுவாகக் கிடையாது. அவர்கள் அநேகமாகப் படித்து முடிந்ததும் இலங்கையிலேயே வேலை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

கரக்பூர் இந்த எண்ணத்தை உரமூட்டி நிலைக்கப் பண்ணாமல் என்னைக் கொஞ்சம் நின்று சிந்திக்க வைத்தது. எனது முந்தைய வாழ்க்கையில் இழையோடியிருந்த உண்மைகளும் நிச்சயங்களும் கரக்பூரில் கழித்த நான்கு வருட அனுபவங்களில் மாயமாக மறைந்து விட்டன. வீட்டுக்குத் திரும்புவது எவ்வளவு முக்கியமானது என்று இந்த அனுபவங்கள் எனக்குக் கோடி காட்டின. பல கரக்பூர் சக மாணவர்களுக்கு இந்த உணர்வைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் இன்னும் தத்தம் சொந்த வீடுகளிலும் நாட்டிலுமே இருந்தார்கள். வீடு தரும் நிச்சயங்களை அவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள். வீட்டையும் நாட்டையும் விட்டு வெளியேறிய பிறகு அவர்களுக்கு வீடு திரும்பும் ஒரு உந்துதல் கட்டாயம் வந்தே தீரும் என்று நான் சொல்ல வரவில்லை. அறுபதுகள், எழுபதுகளில், படிப்பதற்கு இங்கிலாந்து சென்று அங்கேயே வாழ்க்கையை அமைத்துக் கொண்ட இலங்கைத்தமிழர் போலவே பெரும்பான்மையானோருக்கு அப்படியான உந்துதல் வராமலே போகலாம்.

அப்படி நானும் இருக்க முடியாது என்ற பிரக்ஞை எனக்கு வந்தது கரக்பூரில்தான். எனக்கு வீடு திரும்புகிற தாகம் உக்கிரமாகவே இருந்தது. இந்தப் பிரக்ஞை அதற்கு முன் வெளிநாட்டுப் படிப்பு, வேலை என்று நான் கற்பனை செய்திருந்த வாழ்க்கைப்பாதையை உடைத்து நொறுக்கிவிட்டது. ஆனால் இருந்த கொஞ்சநஞ்ச மாற்று வழிகளையும் யுத்தம் மூடி அடைத்துவிட்டது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மின்பொறியியல் திணைக்களத்துக்கு ஏதாவது வேலை வாய்ப்புகள் உள்ளனவா என்று விசாரித்து ஒரு கடிதம் அனுப்பினேன். பதிலே வரவில்லை. நான் ஒரு கோடைக்கால வேலைப்பயிற்சிக்காக ஹிந்துஸ்தான் கணினி நிறுவனத்தில் நான் வேலைசெய்த குழுவின் தலைவர், “நீ இந்தியாவிலேயே வேலை பார்க்க முடிவெடுத்தால் நான் வேலை தருகிறேன்” என்று சொல்லியிருந்தார். கரக்பூர் கணினியியல் திணைக்களத்தின் தலைவர் முதுமாணிப் படிப்புக்குப் புலமைப் பரிசில் தரக்கூடும் என்ற வாய்ப்பும் இருந்தது.

ஆனால் இந்தியாவிலேயெ தொடர்ந்து இருக்கும் சாத்தியத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு வயிற்றில் புளி கரைத்தது போல. எது எப்படியிருந்தாலும் கடைசியில் நான் இந்தியப் பிரஜாவுரிமை இல்லாத அந்நியன். பிரஜாவுரிமை எடுக்காவிட்டால் எந்த நேரத்திலும் வெளியேற்றப் படலாம். ஒரு இந்தியரைத் திருமணம் செய்வதைத் தவிர வேறு வழிகளில் பிரஜாவுரிமை பெறுவது லேசான காரியமல்ல. 1988க்குப் பிறகு இந்தியாவில் நடந்த, இலங்கைத் தமிழரின் நிலைமையை இக்கட்டாக்கிய சம்பவங்கள் எனது பயம் நியாயமானது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டின. இலங்கைக்குத் திரும்பிப் போவதற்கான சாத்தியம் இருக்கவில்லை. ஆனால், மூன்றாவது வருடம் வந்ததும் அமெரிக்க மேற்படிப்புப் புனித யாத்திரைக்குத் தேவையான கிரியைகள் செய்ய ஆரம்பித்துவிட்டேன். கரக்பூரில் படித்து முடிகிற காலத்தில் எனக்குக் கிடைத்த மூன்று புலமைப்பரிசில் வாய்ப்புகளில் சிராக்யூஸ் பல்கலைக்கழகத்தின் வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன். வருங்காலம் தெளிவாகத் தெரியவில்லை. முதுமாணிப் படிப்பை முடித்துக் கொண்டு ஒரு வேலையைத் தேடி எனது தங்கைகளின் படிப்புக்குத் தேவையான பணம் சம்பாதிக்க வேண்டும்; அதற்குப் பிறகு முடியுமானால் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பிப் போய் கலாநிதிப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு இறுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கொள்ளலாம். இப்படியேல்லாம் கொஞ்சம் தெளிவற்ற மங்கலான சிந்தனைகள் இழையோடின.

கனடாவில் உறவினர்கள் இருந்த நூற்றுக் கணக்கான மற்றத் தமிழ்க் குடும்பங்களைப் போல எனது குடும்பமும் கனேடியக் குடிவரவு விண்ணப்பத்தின் செயல்முறைகளுக்கூடாகப் போய்க் கடைசிக் கட்டம் வந்ததும் தாங்கள் கனடாவுக்குச் செல்வதில்லை என்று முடிவெடுத்தார்கள். அது ஆச்சரியமில்லை. அதற்கு முதல் இரண்டு முறை, வெளிநாட்டுக்கு வேலைக்குப் போவதற்கான வாய்ப்புகள் வந்தபோது போவதில்லை என்று அப்பா முடிவெடுத்திருந்தார்.

ஆனால் 1988இல் நான் இலங்கைக்குத் திரும்பியபோது நிலைமை முற்றாக மாறியிருந்தது. குடும்பத்தோடு புலம்பெயர்வது தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு அப்பா வந்திருந்தார். இந்திய அமைதிகாக்கும் படைக்கும் புலிகளுக்கும் இடையில் 1987-88இல் நடந்த யுத்தத்தின் கசப்பான அனுபவங்கள் அவரது மனத்தை மாற்றியிருந்தன. நான்தான் இந்தப் புலப்பெயர்ச்சிக்கு வழிகோல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தெட்டத்தெளிவாக இருந்தது. எனது தங்கை அகிலாவை வெளியில் எடுப்பது தான் மிகமுக்கியமானது என்று அப்பா கூறியிருந்தார். அகிலா யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட மாணவி. ஆனால் அவளுக்குத் தன் படிப்பை யாழ்ப்பாணத்தில் தடங்கல்களின்றி முடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை யாருக்குமே இருக்கவில்லை.

அமெரிக்காவுக்குப் போகும் விமானத்தில் ஏறும் போது எனக்குப் புதுமையாகவோ பெரிய உற்சாகமோ இருக்கவில்லை. எனது நோக்கம் முதுமாணிப் படிப்பை எவ்வளவு சீக்கிரமாக முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக முடித்துவிட்டு ஒரு வேலை தேடுவதுதான். மனவிசாரம் எதுவும் இல்லாமல் விமானமேறக் கிடைத்தது என் அதிர்ஷ்டம். எனக்குப் பல்கலைக்கழகத்திலேயே ஒரு பாட உதவியாளராக வேலை கிடைத்திருந்தது. பல்கலைக்கழகம் ஆரம்பிக்க முதல் பாட உதவியாளர்களுக்கு ஒரு மூன்று வாரப் பயிற்சிப் பட்டறை இருந்தது. அந்த நேரத்தில் இருக்க இடமும் உணவும் வழங்கப்பட்டன. அதற்குப் பிறகு இருக்கை ஒழுங்குகள் செய்வதற்கும் வேறு காரியங்களைப் பார்ப்பதற்கும் நேரம் தரப்பட்டது. இது ஒரு வரப்பிரசாதம் தான். மற்ற இலங்கையர் இந்தியர் போலன்றி நான் நியூயார்க்கின் ஜேஎப்கே விமான நிலையத்தில் தரையிறங்கிய போது வரவேற்க யாரும் காத்திருக்கவில்லை. எனக்கு அமெரிக்காவில் யாரையுமே தெரிந்திருக்கவில்லை. அதைப்பற்றி நான் கவலைப்படவும் இல்லை. உடனேயே சிராக்யூஸுக்கு இன்னொரு விமானத்தில் ஏறிப்போய் நேரடியாகப் பட்டறை நடக்கவிருந்த மாணவர் விடுதிக்குப் போய்ச் சேர்ந்தேன்.

ஜேஎப்கே எந்த விதத்திலும் என்னை மலைக்க வைக்கவில்லை. குப்பை கூளமும், சன நெருக்கடியுமாக ஒரு சந்தை போல இருந்தது. எனது விமானம் புறப்பட இருந்த வாசற்படலையில் ஒலிபெருக்கி அமைப்பு வேலை செய்யவில்லை. ஒரு உத்தியோகத்தர் அதன் முன்னால் நின்றுகொண்டு அடுத்ததாக எந்த விமானம் புறப்படும் என்று உரத்த குரலில் கூவிக் கொண்டிருந்தார். இப்படியான ஒரு இடத்தில் இருக்கும் போது எப்படி ஊர் பற்றிய பிரிவாற்றாமை வரும்? கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் இது கல்கத்தாவோ புறக்கோட்டையோ என்று முற்றுமுழுதாக நம்பிவிடலாம்.

சிராக்யூஸ் கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் அங்கிருந்த சூழல் பேராதனை அல்லது ஐஐடி போன்ற ஒரு பல்கலைக்கழக வளாகத்தைப் போல இருந்தது. வித்தியாசங்கள் இருந்தனதான்: வாகனங்கள் போக்குவரத்து விதிகளை உதாசீனம் செய்யவில்லை; மனிதரின் தோல்கள் கூட வெள்ளையாக (அல்லது கூடக் கறுப்பாக) இருந்தன; உடைகள் உடல்களை மறைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தன; ஆனால் அதிர்ச்சி தரக்கூடிய வித்தியாசங்கள் எதுவுமே இருக்கவில்லை. முதன்முறையாக அமெரிக்கா வந்தபோது தாங்கள் அனுபவித்த உணர்ச்சிப் பிரவாகங்களைப் பற்றி எத்தனையோ தெற்காசியர்கள் சொல்லிக் கேள்விப்பட்ட “இது அமெரிக்கா!” என்ற வியப்பு எனக்குக் கிஞ்சித்தும் இருக்கவில்லை.

சாட்லர் அடுக்குமாடி விடுதியில் எனக்கு ஒரு அறை ஒதுக்கப் பட்டிருந்தது. அங்கே நான் போனபோது அந்த அறையிலிருந்து ஒரு உயரமான, மிடுக்கான இளைஞன் வெளியே வந்தான். என்னைக் கண்டதும் வெளியே போகும் எண்ணத்தைக் கைவிட்டுத் தானும் அறைக்குள்ளே வந்து உட்கார்ந்தபடி எப்போது அரட்டையடிக்கலாம் என்று காத்திருந்தான்.பயிற்சிப் பட்டறை தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. இவனோ அதற்கும் முன்னரே வந்துவிட்டதால் தனிமையால் வாடிக்கொண்டிருந்தான். அடுத்த சில நாட்கள் நான் பெப்பேயுடனே எங்கும் திரிந்தேன். ஜெட்லாக் போன்ற குழப்பமெதுவும் இல்லாமல் இரவுகளில் நன்றாகவே தூங்கினேன். இரண்டாம் நாள் காலை எழும்பி அந்தத் தளத்திலிருந்த பொதுக் கழிவறைக்குப் போன போது பூணூலும் வேட்டியும் அணிந்த ஒரு பிராமணப் பையன் முகங்கழுவிக் கொண்டிருந்தான். நான் அதை வியப்பாகப் பார்க்கவில்லை. என்னை வியப்பில் அதிரவைக்கும் முயற்சியில் அமெரிக்காவுக்கு மீண்டும் முற்றுமுழுதான தோல்வி!

அடுத்த மூன்று வாரங்களும் பட்டறையில் ஒரே கும்மாளம். காலபோக்கில் பெப்பேயும் நானும் ஒரு தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்தோம். வகுப்புகள் ஆரம்பித்தன. புதுமையாக எதுவுமே இருக்கவில்லை. சில வித்தியாசங்கள் இருந்தவைதான். நாங்களேதான் எங்கள் உணவுகளைத் தயார்ப்டுத்த வேண்டியிருந்தது. சூழலில் பரிச்சயமில்லாத மரஞ்செடிகளும் பிராணிகளும் நிறைந்திருந்தன. வாகனங்கள் தெருக்களில் பிழையான பக்கத்தில் ஓடின. தெருவைக் கடக்க முன் நான் எப்போதும் பிழையான பக்கத்தைத் தான் பார்த்தேன். வாழ்க்கையில் முதல் முறையாக மாதாமாதம் சம்பளம் கிடைத்தது. எனது வாழ்க்கையில் பல நண்பிகள் இணைந்து கொண்டார்கள்தான் (கரக்பூரில் ஒரிரு நண்பிகள் இருந்தார்கள். அநேகமான ஆண் மாணவர்கள் தங்கள் நான்கு வருடங்களில் ஒரு பெண்ணோடு பேசும் வாய்ப்பே இல்லாத இடத்தில் அது அபூர்வம்!). உலகின் பல பாகங்களிலிருந்தும் வந்த மாணவர்களை சந்திக்க முடிந்தது. ஆனால் எதுவும் வியப்பில் மூழ்க வைக்கும் திகைப்பாகவில்லை. வாழ்க்கை வழக்கம்போலவே போய்க்கொண்டிருந்தது.

சிராக்யூஸின் பனிக்காலம் அமெரிக்காவின் தரத்தைக் கொண்டு பார்த்தால்கூட தாங்க முடியாதது என்ற கீர்த்தியைப் பெற்றிருந்தது. அந்தக் கீர்த்தியை நான் ஏற்றுக் கொண்டதற்கு ஒரே சாட்சியம் பனிக்கால ஆடைகளை வாங்கிக் கொண்டதுதான். நான் வாழ்க்கையிலேயே அதற்கு முன் பனிமழை கண்டது கிடையாது. சிறுவயதில் மலிவான சோவியத் கதைப் புத்தகங்களில் பனி பற்றிப் படித்திருக்கிறேன். பனிமழையில் பளிங்கு மாதிரி ஒரே அச்சில் செய்த பனிப் படிகங்களாக விழுவன என நினைத்திருந்தேன்.

முதல்முறை நான் பனிமழையைக் கண்டது பேராசிரியர் மற்சனின் வகுப்பிலிருந்து தான். அந்த வகுப்பில் கிட்டத்தட்ட 35 சீனர்கள், ஐந்தாறு இந்தியர்கள், ஐந்தாறு அமெரிக்கர்கள். அதாவது, பெரும்பான்மையானோர் அதற்குமுன் பனிமழையைக் கண்டதில்லை. பனிமழை ஆரம்பித்த போது பேராசிரியர் மற்சன் தன் வழமையான குறும்புத்தனத்துடன் இப்படி ஏதோ சொன்னார்: “ஆகவே எடுகோளின் அடிநிலையை நிறுவிவிட்டோம். இப்போது எல்லா n களுக்கும், n < p, எங்கள் எடுகோள் சரி என்று அனுமானிப்போம். பனிமழை பொழிகிறது. n=p ஆகும்போது எப்படித் தொகுப்புநிறுவலாம் என்று பார்ப்போம்…” பாதி வகுப்பு தலையைத் திரும்பி பனிமழையை வேடிக்கை பார்த்தது!

அது கனத்த பனிமழையல்ல. வகுப்பு முடிந்து வெளியே வந்தபோது, காலநிலை கதகதப்பாக பனி இருந்த இடம்தெரியாமல் கரைந்து மறைந்துவிட்டது. நானும் அதைப் பற்றி மறந்துவிட்டேன்.

அடுத்த சனிக்கிழமை, நேரம் சென்று எழும்பி வழக்கம் போலப் பதினொரு மணிக்கு ஒளிபரப்பாகும் “Bugs Bunny” நிகழ்ச்சியைப் பார்க்கத் தொடங்கினேன். மதியத்துக்கு நிகழ்ச்சி முடியும் நேரத்தில், பனி பெய்யத் தொடங்கிவிட்டது.

பாலாபிஷேகம் செய்வது போலக் கண்கொள்ளாத அழகுடன் பனி கொட்டியது. நப்போலி நகரத்தில் நாலைந்து வருடங்களுக்கு ஒருமுறைதான் பனிமழை கொட்டுமாம். ஆகவே பெப்பே ஏற்கெனவே பனிமழையைக் கண்டிருந்தாலும் அதன் அழகில் லயித்துப் போயிருந்தான். ஒரு மணித்தியாலத்துக்கு நாங்கள் சாளரத்தருகில் பனிமழையின் லாவண்யத்தில் கிறங்கிப்போய் நின்றோம். அப்போதுதான் எனக்குப் பிடரியில் அறைந்த மாதிரி உண்மை உறைத்தது. நான் முற்றுமுழுதாக அந்நியமான ஒரு நாட்டில் இருக்கிறேன். இது முன்னொரு நாளுமே கண்டிருக்காத ஒரு விந்தை. அதைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தேன் தான். அதன் பௌதிகம் புரிந்ததுதான். ஆனால் இது ஏதோ படத்தில் பார்த்த பனிமழையல்ல. நிச்சயமாக பார்த்தும் தொட்டும் கேட்டும் அனுபவிக்கத் தக்க பனிமழை.

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வெளியே போக முடிவெடுத்தோம். என்னிடமிருந்த எல்லாப் பனிக்கால உடைகளையும் அணிந்து கொண்டேன். வெளியே எதை எதிர்பார்க்கலாம் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு நாளுமே பூச்சியத்துக்குக் குறைவான வெப்பநிலையை நான் கண்டதில்லை. வெளியே காலடி வைக்கும் போது ஏதோ ஒரு பேர்தெரியாத கிரகத்தில் கால் வைக்கும் விண்வெளி வீரன் போன்ற ஒரு உணர்ச்சி! பார்க்கும் இடமெல்லாம் வெள்ளை வெளேரென்று இருந்தது. நான் பனிப்பொழிவை விரல்களால் தொட்டுப் பார்த்தேன். மென்மையாக இருந்தது, தூய்மையின் சின்னம் போலக் கண்கொட்ட விடாத அழகு. அம்மன் கோவில் திருவிழாவுக்குப் பக்தர்கள் தரையில் உட்கார்ந்து கொள்வதற்காகக் கொண்டு வந்து பறிக்கும் வெண்மணல் போல. ஆனால் இங்கே அந்த ‘வெண்மணல்’ தரையில் மட்டுமல்ல கூரைகள் மேலும், உயர்ந்து நெடுத்த அழகிய மரங்கள் மீதும் படர்ந்திருந்தது. ஒரு குழந்தை போல எனக்கு மனம் நிறைந்த மகிழ்வு.

“நீ பிசாசு மாதிரி,” என்றான் பெப்பே: பரந்து நிற்கும் வெள்ளைக் கடலில் கருப்பு ஆடைகளால் உச்சி முதல் உள்ளங்கால் வரை மறைக்கப்பட்டு நின்ற ஒரு கபில மனிதன். அவனுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. இத்தாலியிலுள்ள நண்பர்களுக்குக் காட்டுவதற்காக என்னைப் படமெடுத்தான். நான் கண்டுகொள்ளவில்லை.

அன்று தான் அமெரிக்கா வந்த பிறகு முதற் தடவையாக எனது வாழ்க்கை எவ்வளவு மாறி விட்டது என்பதைப் புரிந்துகொண்டேன். விரைவில் எனது வழமையான மீள்தன்மை திரும்பியது. அதற்குப் பிறகு அமெரிக்காவால் என்னை வியப்படையவோ அதிரவோ வைக்க முடியவில்லை. ஆனால் அந்தச் சனிக்கிழமை, பனிமழையைக் கண்ட மோனத்தில் திளைத்துப் போயிருந்தேன்.

தூய மாசற்ற தூள் போன்ற பனி எனக்கு மிகவும் பிடிக்கும். உறையும் மழையும் பிடிக்காது, உருகி அழுக்காகும் பனியும் பிடிக்காது. நீண்ட தூரம் நடப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கும் வெள்ளைப் பனி வியாபித்திருக்கும் நாட்களில், முக்கியமாக சூரியனும் பிரகாசித்துக் கொண்டிருந்தால், நடப்பது ஒரு தனி இன்பம். பனிக்காலத்தின் சில்லிடும் காற்று எனக்குப் பிடிக்கும். குளிர் தரும் உணர்வு பிடிக்கும். வீட்டில் நான் சூடு குறைவாகத்தான் எப்போதும் வைத்திருப்பேன் (என்னைப் பார்க்க வீடு தேடி வருபவர்களுக்கு அது மிகவும் அலுப்புத் தரும்).

Leave a Reply

Trending

Discover more from eLuttukku / எழுத்துக்கு

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading